தூத்துக்குடி: புதுமணத் தம்பதிகளான கார்த்திகா மாரிசெல்வம் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த கருப்புசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள், வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் இவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சேரலாதன் உத்தரவிட்டார்.
முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற இளைஞரும் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், மாரிசெல்வம் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கார்த்திகாவை திருமணம் செய்து வைக்கும்படி மாரிசெல்வத்தின் பெற்றோர் கார்த்திகா வீட்டாரிடம் பெண் கேட்டுள்ளனர். இதற்கு கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.
ஆனால் கார்த்திகா மாரிச்செல்வம் காதலுக்கு பெண் வீட்டார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி மாரி செல்வம் மற்றும் கார்த்திகா இருவரும், வீட்டை விட்டு வெளியேறி மாரிசெல்வத்தின் சொந்த ஊரான கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகளான மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா கடந்த 1ஆம் தேதி திருவிக நகரில் உள்ள கார்த்திகாவின் தாய் மாமா வீட்டிற்கு விருந்துக்குச் சென்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகா அவரது வீட்டாரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டதாலும், கார்த்திகாவின் இந்த செயல் அவர்களுக்கு அவமானம் என்றுக் கருதி, ஆத்திரத்தில் இருந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தூண்டுதலின் பேரில் முருகேசன் நகர் வீட்டில் வைத்து மாரிசெல்வம் மற்றும் கார்த்திகாவை மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் இருவரையும் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடினர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.