தூத்துக்குடி: பிரையன்ட் நகர் பகுதியில் வசித்துவருபவர் கல்யாணசுந்தரம் (56). இவர் தூத்துக்குடி சுங்கத் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவருகிறார்.
இதனால் கல்யாணசுந்தரத்தின் மனைவியும், மகளும் சென்னையில் வசித்துவருகின்றனர். கல்யாணசுந்தரம் மட்டும் தூத்துக்குடியில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில் ஜூலை 25ஆம் தேதி, மனைவி, மகளைப் பார்ப்பதற்காக கல்யாணசுந்தரம் தூத்துக்குடியிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 30) காலை அவர் வீட்டிற்குத் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில், வீட்டிலுள்ள பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த துணிகள் கலைக்கப்பட்டு 77 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.