தூத்துக்குடி:கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு என தமிழ்நாடு மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டிக்கும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின், கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு என்று கூறினார்கள். ஆனால் தமிழ்நாடு இருளில் உள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளது. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. மின் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சி தற்போது உள்ளது. எங்களை குறித்து சொன்னவர்கள் (சசிகலா) காணாமல் போய் உள்ளார்கள். அதிமுக எம்பியை நீக்க கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினால் எப்படி இருக்குமோ அப்படிதான் சசிகலாவின் கருத்தும் உள்ளது.