தூத்துக்குடி மாநகராட்சியின், கல்வியில் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற பணிகளுக்காக அகில இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. அதற்கான பரிசு வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, சிறப்பான கல்வியினை வழங்கும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
மேலும், பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், பூங்காக்கள் அமைத்தல், குறிப்பாக இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், கல்வி கற்றலில் சிறப்பான பள்ளிக்கட்டிடம், கையடக்க கணினி மூலம் மாணவர்கள் தற்கால நவீன யுக்திகளை கையாளும் வகையிலான பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான கல்வியினை வழங்கும் பணியினை, தூத்துக்குடி மாநகராட்சி ஆனது சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், கட்டமைப்புகளை நவீன காலத்திற்கு ஏற்றவாறு நிறைவேற்றியதின் விளைவாக மாணவர் சேர்க்கையானது கடந்த கல்வி ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 900 குழந்தைகள் படித்து வந்த மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப் பள்ளியில் 2 ஆயிரம் குழந்தைகள் தற்போது சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு பள்ளி, சாமுவேல் புரம் பள்ளி, ஜின் பாக்டரி பள்ளி ஆகிய பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத் திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான போட்டியில், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மொத்தம் மூன்று சிறப்பு திட்டங்கள் இதற்காக அனுப்பப்பட்ட நிலையில், கல்வியில் ஸ்மார்ட் கிளாஸ் பணிகளுக்கு, தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்து உள்ளது. இதற்கான பரிசு செப்டம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்குகிறார். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, விருதுதினை மேயர் ஜெகன் பெரியசாமி பெறுவார் என்றும் கமிஷனர் தினேஷ்குமார் உடன் செல்வார் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது தூத்துக்குடி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பெருமை என்று மேயர் மற்றும் கமிஷனர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி.. மருத்துவ கல்லூரியில் சேர இருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!