திருச்செந்தூர்: இறைவனுக்கு முன் அனைவரும் சமம், விஐபி தரிசனம் ரத்து என்ற உத்தரவை பத்திரிகைகள் சிலாகித்து எழுதின. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவு தான் மறுநாள் அனைத்து ஏடுகளிலும் பக்கங்களை அலங்கரித்தது.
ஆனால், இந்த உத்தரவு நடைமுறையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றோம். ஆனால், அங்கு பார்த்த காட்சிகள் திகிலை ஏற்படுத்தின.
நதியாய் நீளும் வரிசைகள்:சந்நிதி தெரு தாண்டி, தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டும் போதே கூட்ட நெரிசலின் காட்சிகள் கண்ணில் படத் தொடங்கின. கோயிலின் பிரதான நுழைவுவாயிலான சண்முக விலாசம் அருகே இருந்த கட்டண கவுன்டர் அன்னதான மண்டபம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
100 ரூபாய் தரிசனத்திற்கான டிக்கெட் அங்கேயே தொடங்கியது. அங்கிருந்து வரிசைகீழ் நோக்கி இறங்கி பல சுற்றுக்களை கடந்து, கோயிலினுள் நுழைகிறது. ரூ.100 கட்டண வரிசையின் நிலை இப்படியென்றால் தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தின் வரிசை கோயிலின் வெளிபிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி , கலையரங்கிற்குப் பின்னால் இருக்கும் டோல்கேட் வரை செல்கிறது.
அறவே இல்லாத அடிப்படை வசதிகள்:தர்ம தரிசன வரிசையில் பக்தர் ஒருவர் காலை 6 மணிக்கு நிற்கத் துவங்கினால், சாதாரண நாள்களில் 2 முதல் 3 மணி நேரமும், விசேஷ நாள்களில் 4 முதல் 6 மணி நேரமும், அல்லது அதனையும் தாண்டி நின்றால் தான் தரிசனம் முடித்து வெளியே வர முடியும்.
இந்த காத்திருப்பு நேரத்தில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. பச்சிளம் குழந்தைகளுடன் கோயிலுக்கு வருவோர், பாதி வரிசையில் குழந்தை அழுதால் கோயிலுக்குள் தரிசனத்திற்காக தொடர்ந்து செல்லவும் முடியாது, போதுமென்று வெளியேற வேண்டுமானாலும், இதுவரை கடந்து வந்த நெரிசல் மிகுந்த வரிசையை திரும்பி கடக்க வேண்டும்.