தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதுதவிர முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (நவம்பர் 18) ஆய்வு செய்தார்.
'தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ - மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
தூத்துக்குடி: மாநகராட்சியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக 70 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த சில தினங்களாக தூத்துக்குடியில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பெய்தது. ஒரே நாளில் பெய்த மிக கன மழையால் தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக மாநகரில் 70 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர ஊரக பகுதிகளில் 10 மின் மோட்டார்கள் மூலம் வெள்ளநீர் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது" என்றார்.