தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு குறித்து கண்காணிப்பு குழு ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வரும் ஆக்சிஜனை உற்பத்தி பணியினை மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது.

sterlite
sterlite

By

Published : May 13, 2021, 6:49 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்திற்குப் பின் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை, தற்போது ஆக்ஸிஜன் உற்பத்திகாக மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி பணியை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் அடங்கிய கண்காணிப்பு குழுவினையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் அலகினை சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த வாரத்தில் நடைபெற்றன. தமிழ்நாடு அரசின் உத்தரவை தொடர்ந்து கடந்த வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பும், உற்பத்தி பணிக்கு தேவையின் அடிப்படையில் தண்ணீர் வழங்க குடிநீர் இணைப்பும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

மின் இணைப்பு சரிபார்க்கப்பட்டு, மின் இணைப்பு தடைகள் ஒவ்வொரு நிலையாக சோதனை செய்யப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி அலகுக்கு தேவையான முழு அளவு மின்சாரத்தையும் பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வரும் ஆக்சிஜனை உற்பத்தி பணியினை, மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரான ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன், சுற்றுச்சூழல் பொறியாளர் அடங்கிய வல்லுநர் குழுவினர் நேற்று (மே 12) ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும் பகுதிக்கும், தாமிரம் உருக்கு பகுதிக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி பணிகள் மேற்கொள்ள உள்ள இடங்கள், தயார் நிலையில் திரவ ஆக்சிஜனை இருப்பு வைப்பதற்கான இடம், ஆக்ஸிஜனை வெளியே எடுத்து செல்ல கனரக வாகனங்கள் வரும் வழி, வெளியேறும் வழி, ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுக்கும் தாமிர உருக்காலை பகுதிக்கும் இடையே ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி பணியில் ஈடுபடும் பணியாளர்கள், வருகை பதிவு செய்யும் கையேடு, பணியில் ஈடுபடும் பொறியாளர்கள், காவலாளிகள் உள்ளிட்டவைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

சோதனை அளவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் 15ஆம் தேதி 35 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மருத்துவ பயன்பாட்டுக்காக வெளிக்கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் கேட்கையில், "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து திரவ ஆக்சிஜன் இன்று (மே 13) வெளியே அனுப்பப்படும் என்ற தகவல் தவறானது. இதுதொடர்பாக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details