தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைகாரன்மடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவர், ரத்னபாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ரத்னபாண்டி பார்வையற்றவராவார். தாயாரின் உழைப்பிலேயே தன் ஆரம்ப கல்வி முதல் செவிலிய பட்டப்படிப்பு வரை பயின்று முன்னேறியிருக்கிறார்.
பள்ளிப்பருவ வயதிலேயே தனக்குள் ஏற்பட்ட உளவியல் மாற்றத்தையும் உடல் ரீதியான மாற்றத்தையும் உணர்ந்த அன்புராஜ், அன்புரூபியாக மாறியிருக்கிறார். திருநங்கையாக மாறிய பின் கல்லூரி பருவத்தில் உள்ளூரிலும் வெளியிடங்களிலும் சமூக ரீதியாக பல தடைகள், இன்னல்களை அவர் சந்தித்துள்ளார். பொது சமூகத்தால் புறக்கணிப்பு, உறவினர்களால் நிராகரிப்பு, நண்பர்களின் கேலி கிண்டல்கள் என அத்தனையையும் கடந்து, தடைகளைக் தகர்த்து, குமரி மாவட்டம் காவல்கிணற்றில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் தனியார் மருத்துவமனையில் செவிலிய படிப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தார்.
பின் அங்குள்ள மருத்துவமனையிலேயே செவிலியாகவும் பணியாற்றினார். கடந்த இரண்டாண்டாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அவர், செவிலி பணிக்கான தமிழ்நாடு அரசு அறிவிப்பைத் தொடர்ந்து அரசுப் பணிக்கான தேர்வை எழுதி அதில் வெற்றியும் பெற்றார். இதன்மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தப் பணிக்கான ஆணையை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். திருச்சியிலுள்ள மருத்துவமனையில் செவிலியாக பணியமர்த்தப்பட்டுள்ள அன்புரூபி, தனக்கு சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பு கேட்டு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் செவிலியாக பணிசெய்ய அரசு ஆணை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அன்புரூபி ஆவலாக உள்ளார்.