தூத்துக்குடி:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்ரவீந்திரன் தன் கவிதைகளால் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டிய சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், “பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார்.
அவர் வாழ்ந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டமும் திருநெல்வேலி சீமை என்ற பெயரோடுதான் அழைக்கப்பட்டது. இவரது தந்தையின் பெயர் சின்னசாமி ஐயர் மற்றும் இவரது தாயாரின் பெயர் இலக்குமி அம்மையார்.
பாரதியாரின் பெற்றோர் அவருக்கு சுப்பிரமணியம் என்ற பெயரை சூட்டினார்கள். இளம் வயதில் அவர் அனைவராலும் செல்லமாக சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
பாரதியார் பெயர் காரணம்: சுப்பிரமணியம் வருங்காலத்தில் மிகப்பெரிய கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். அதற்காக சுப்பிரமணியத்தை ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். ஆனால் சுப்பிரமணியத்துக்கு தமிழில் கவிதைகள் எழுதுவதில் தான் அதிகம் நாட்டம் இருந்தது.
தனது 11ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை அவர் தொடங்கி விட்டார். சுப்பிரமணியத்தின் கவிதை எழுதும் திறமையைக் கண்டு வியந்த எட்டயபுரத்தின் மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை சுப்பிரமணியத்திற்கு வழங்கினார். பாரதி என்று சொல்லிற்கு சரசுவதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டபவர் என்று பொருள். அன்றிலிருந்துதான் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்ரமணிய பாரதியாக மாறினார்.
1897ஆம் ஆண்டு பாரதியாருக்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அவர் வெறும் 14 வயது நிரம்பிய சிறுவனாகவே இருந்தார். பாரதியாரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதிக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் இருந்தார்கள். தங்கம்மாள் 1904 ஆம் ஆண்டிலும், சகுந்தலா 1908 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.
பாரதியார் ஏராளமான கவிதைப் படைப்புகளை இயற்றியுள்ளார். குயில், பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, தமிழ் மொழி வாழ்த்து, கண்ணன் பாட்டு, ஞானரதம், விநாயகர் நான்மணிமாலை, முரசு உள்ளிட்டவை அவரது படைப்புகளில் குறிப்பிடத்தகுந்தவை.
பாரதியார் அறிந்த மொழிகள்:பாரதியின் பதினாறாவது வயதில் அவரது தந்தை சின்னசாமி ஐயர் மரணம் அடைந்து விட்டார். தந்தையின் மறைவுக்கு பின்னர் பாரதியாரின் வாழ்க்கையை வறுமை புரட்டிப் போட்டது. பின்னர் பாரதியார் காசியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சில காலம் தங்கினார்.
அங்கே இருக்கும்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்று அம்மொழிகளில் புலமை பெற்றார். இவை மட்டுமின்றி ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாரதியார் புலமைப் பெற்றவராக திகழ்ந்தார்.
பல மொழிகளை அறிந்து புலமை பெற்ற பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியதன் மூலம் தமிழுக்கு நிகரான மொழி வேறு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார்.