உலக மகளிர் தின விழாவை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அக்கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து மகளிர் அணியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 2020ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கழகத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா என்பதால் எர்ணாவூர் நாராயணனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
வீரவாள் பரிசளிக்கப்பட்ட போது பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், மதுரையில் ஒரு பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அந்நிகழ்ச்சியை பொள்ளாச்சியில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. காந்தி சொன்னது போல், நள்ளிரவு 12 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக செல்லலாம் என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு உண்மை என தோன்றவில்லை. ஏனென்றால் தற்போது தமிழ்நாட்டில் வழிப்பறி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது", என்றார்.
இதையும் படிங்க:மழையூரில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் சிறப்பு