தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் ஆத்தூர் கிராமப் பகுதியின் முக்கியத் தொழிலாக வெற்றிலை விவசாயம் உள்ளது. இயற்கை முறையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை காரம் மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது. முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் உடன்குடியில் இருந்து தினமும் 500 கிலோ வெற்றிலை, பாக்கு வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கு விளையும் வெற்றிலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சுவை கூட்டும் தாமிரபரணி வெற்றிலை ஆத்தூர் பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 10 விவசாயிகள் சேர்ந்து கூட்டு முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். வெற்றிலை நடவு செய்யும் வயலில் முதற்கட்டமாகக் காற்று புகாதபடி வேலிக் கட்டி 4 அடி பட்டத்தில் முதலில் அகத்தி விதைகளை ஊன்றி 40 நாட்கள் வளர்த்த பின்னர் இதன் இடையில் வெற்றிலையினை நடவு செய்கின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலைக்கு தொழு உரம், புண்ணாக்கு மற்றும் அகத்தி போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
முதல் 1 வருடத்தில் பறிக்கப்படும் முதல் ரக இலைகள் சக்கை என்றும், இவ்வகைகள் இலைகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாவது ரகமான இளம்பயிர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களுக்கும், இறுதியாக முதுகால் பயிர் அல்லது பொடி வெற்றிலை உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
1 ஏக்கர் வெற்றிலை கொடி நடவு செய்ய ரூ.7 லட்சம் வரை செலவுச் செய்யப்படுகிறது. முறையானப் பராமரிப்பு செய்தால் இரண்டரை வருடத்தில் 14 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். செலவுகள் போக விவசாயிகள் 7 லட்சம் வரை லாபம் பெற முடியும். தாமிரபரணி நீரின் தன்மையாலும் மண்ணின் சிறப்பாலும் இங்கு விளையும் வெற்றிலை 10 நாட்கள் வரை கெடாது என்பது சிறப்பான தகவல்.
தற்போது சரியான மழை இல்லாத காரணத்தினால் மகசூல் குறைவாகவே உள்ளது என்கின்றனர் விவசாயிகள். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடியில் கடல் நீர் புகுந்து, விவசாய நிலம் உவர்ப்பு நிலமாக மாறியுள்ளது. இதனால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றிலை கொடி கால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவாக இருந்ததால், ஒரு கிலோ வெற்றிலை ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கோயில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைப்பெற்று வருவதால் வெற்றிலை விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு ஒரு கிலோ வெற்றிலை ரூ.242-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. அதேப்போன்று கொட்டப்பாக்கு ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பணப் பயிரான வெற்றிலையை மைக்ரோ ஸ்கேனிங் செய்வதினால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்ய முடியவில்லை என்பது விவசாயிகளின் மனக் குமுறலாகவே உள்ளது.
ஆகவே மாநில அரசு, வெளிநாடுகளுக்கு வெற்றிலைகளை ஏற்றுமதி செய்யவும், ஆத்தூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, தென்கால் வாய்க்கால், ஆத்தூர் குளம் போன்றவை நீர் ஆதாரத்திற்காக முறையே தூர்வாரப் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை இல்லாத காலங்களில் மோட்டார் மூலம் நிலத்தடி நீர் பாசனம் செய்ய வேண்டிய நிலை உருவாகுவதால் செலவுத் தொகை அதிகமாகிறது என்பதால் நலவாரியங்கள் அமைத்து வெற்றிலையை நோய்கள் தாக்காமல் கட்டுப்படுத்திட அரசு வேளாண் துறை மூலம் இயற்கை உரம் பெற அரசு மானியம் முறையில் கடனுதவி தர வேண்டும் என்றும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:அமெரிக்காவை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை! 2008 மீண்டும் திரும்புகிறதா? இந்தியாவின் நிலைப்பாடு என்ன?