தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம், நான்காவது தெருவில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரெயில்வே சுரங்கப்பாலம் அருகே இளையரசனேந்தல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு இடையே செல்போன் டவர் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியவர்கள், குழந்தைகள் செல்போன் டவரிலிருந்து வரும் கதிர் வீச்சினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாலும், இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.