நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அந்தந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் பத்திரமாக வைப்பதற்கான ஆய்வுகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்தே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.