தூத்துக்குடி:சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி ஓட்டுநரான இவர் ஆன்லைன் ரம்மியில் பணம் வைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாயை இழந்த நல்லதம்பி, தனது தம்பி முத்துராஜிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
இந்த நிலையில் முத்துராஜ் தனது சகோதரன் நல்லதம்பியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். ஆனால், நல்லதம்பி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும், சில்லாநத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்லதம்பி முத்துராஜிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் நேற்று (ஏப்.1) இரவு நல்லதம்பியை பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. பின்னர், இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் முத்துராஜ் சரணடைந்துள்ளார்.