திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து குடிவைத்தார். கவிதா முத்தையாபுரத்தில் ஐஸ் கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலைக்குச் சென்றார். நவம்பர் 8ஆம் தேதி கவிதா மாயமானதாகக் கூறப்படுகிறது. அவரை எட்வின் தேடிவந்த நிலையில், உடல் கருகிய நிலையில் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் சடலமாகக் கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்துநகர் காவல் துறையினர் கவிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கவிதா எட்வினை பிரிந்து ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியுடன் மூன்றாவதாக குடித்தனம் நடத்திவந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து கருப்பசாமியை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார். அவரை தங்களுக்கே உரித்தான பாணியில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில்...
கவிதா வேலை பார்த்த இடத்தில் பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்ததாகவும் அவர்களிடம் எல்லாம் தனது செல்போன் எண்ணை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் அங்கு அடிக்கடி வந்துசெல்லும் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியுடனும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.