தூத்துக்குடி மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலுவின் உடலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் வளாகத்தில் அவரது உடலுக்கு தென் மண்டல ஐஜி முருகன், காவல்துறை உயர் அலுவலர்கள், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் பாலுவின் சொந்த ஊரான முடிவைத்தானேந்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலை தென் மண்டல ஐஜி முருகன், காவல்துறை உயர் அலுவலர்கள், எஸ்.பி., ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுமந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல ஐஜி முருகன், "வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் மதுபோதையில் மினி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது, உதவி காவல் ஆய்வாளர் பாலு வாகனத்தை பறிமுதல் செய்து முருகவேலை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், மற்றொரு வாகனத்தின் மூலம் உதவி ஆய்வாளர் பாலு மீது பின்பக்கமாக மோதி உள்நோக்கத்தோடு கொலை செய்துள்ளார். இது கோழைத்தனமான செயல். உடற்கூராய்வில், உடலின் உள்பகுதியில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த முருகவேலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் இன்று(பிப்.1) விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சரவணக்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த பின் முழுவிபரமும் தெரியவரும். உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். குற்றவாளி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:'பாலு இனி நீ இல்லை' - ராமோஜி ராவ் உருக்கம்!