தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டங்களில் களப்பணியாற்றியவர்கள் மீதான விசாரணை அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களில் முன்நின்ற பாத்திமா நகரைச் சேர்ந்த கெபிஸ்டன், சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறையினர் அனுப்பியிருந்தனர்.
அதனடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் துணையுடன் அவர் இன்று (ஆகஸ்ட் 10) மாலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினரின் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது தற்பொழுதும்; அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் மக்களை அணிதிரட்டியதற்காக கெபிஸ்டன் மீது 107ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சார் ஆட்சியர் முன்னிலையில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஸ்டெர்லைட் பற்றி பேசக்கூடாது. உயிரோடு இருந்தாலும் உரிமைகளைப் பற்றி பேசக்கூடாது என காவல் துறையினர் நினைக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது. தமிழ்நாடு அரசு ஆலையை மூடியபோதும் பராமரிப்புப் பணிக்காக நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மனு அளித்துள்ளனர். இந்தநிலையில் இப்போதும் தினசரி 250-க்கும் மேற்பட்டோரை வைத்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதெரிந்தும் அலுவலர்களும், காவல் துறையினரும் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனரா?.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பேசுபவர்கள் குற்றவாளிகள் என்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள் தான். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடியில் மண் சார்ந்த மக்கள் போராட்டங்கள் என்றுமே ஓயாது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடக்கும் நெருக்கடிகள் தொடர்ந்தால், தூத்துக்குடியில் மக்களை அணிதிரட்டி அரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் கண்டிப்பாக மீண்டும் நடக்கும்" எனத் தெரிவித்தார்.