தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 19ஆம் கட்ட விசாரணை நேற்று தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முன்னிலையாகி விளக்கமளிப்பதற்காக நடிகர் ரஜினி, வழக்குரைஞர் ஹென்றி திபேன் உள்பட 31 பேருக்கு ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதில் நடிகர் ரஜினி நேரில் முன்னிலையாவதற்கு விலக்குக் கோரி தனது வழக்குரைஞர் மூலமாக ஒரு நபர் ஆணையத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அதன்பேரில் ரஜினி தரப்பில் வழக்குரைஞர் இளம்பாரதி இன்று ஒரு நபர் ஆணையத்தில் நேரில் முன்னிலையாகி, மனுவை தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி அருணா ஜெகதீசன், நடிகர் ரஜினி இன்று மட்டும் நேரில் முன்னிலையாக விலக்கு அளித்து பதில் மனு தாக்கல்செய்வதற்கு கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு நபர் ஆணைய வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ரஜினி இன்று ஒரு நபர் ஆணையத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிப்பதற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அவர் நேரில் முன்னிலையாக விலக்குக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஒன்று தான் நேரில் வந்து முன்னிலையாவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும், இரண்டாவதாக தொழில்முறை ரீதியாக வேலை இருப்பதால் இன்று நேரில் முன்னிலையாக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று மட்டும் நேரில் முன்னிலையாக விலக்கு அளிக்கப்பட்டது.
விசாரணைக்கு முன்னிலையாவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது. மீண்டும் வேறொரு நாளில் அவர் நேரில் முன்னிலையாவதற்கு அழைப்பாணை அனுப்பப்படும். அதற்கிடையில் விசாரணை தொடர்பான பதில் மனுவினை தாக்கல்செய்வதற்கு ரஜினிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான விளக்கத்தினை எழுத்துப்பூர்வ ஆவண குறியீடாக தாக்கல்செய்ய மனு அளித்துள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான். அந்த மனுவில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு முன்னிலையாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
‘ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு ரஜினி ஒத்துழைப்பார் என நம்புகிறோம்’ கடந்த 4ஆம் தேதி அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கையில், ஒரு நபர் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனக் கூறியுள்ளார். எனவே அவர் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம் என்றார்.