தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வந்தவர் வின்சென்ட். துறைமுக ஊழியரான இவர், தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைப்போனது.
இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வின்சென்ட்டின் மனைவி ஜான்சியே சொந்த வீட்டுக்குள் நகையை திருடியது தெரியவந்தது. காவல் துறையினர் ஜான்சியிடம் நடத்திய விசாரணையில், வீட்டிலிருக்கும் நகை, பணத்தை 2 மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்தேன். ஆனால் மதுபோதைக்கு அடிமையான என் கணவர், குடிப்பதற்காக நகைகளை விற்று விடுவாரோ என்ற பயத்தில், அந்த நகைகளை நானே திருடி வீட்டிற்கே எதிரே உள்ள எங்களுக்கு சொந்தமான காலி இடத்தில் மண்ணுக்குள் புதைத்தாக வாக்குமூலம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஜான்சி அளித்த தகவலின்படி, அவரின் வீட்டுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகளை காவல் துறையினர் மீட்டு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க நடவடிக்கை எடுத்தனர். நகைகளை திருடி ஒளித்துவைத்து நாடகமாடிய ஜான்சியை காவல் துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.