எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அமோக விற்பனை தூத்துக்குடி:எட்டையாபுரத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை, அதன் சுற்றுவட்டாரங்களில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு, கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டு வரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், எட்டையபுரத்திற்கு ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவர்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் திங்கள் கிழமை (ஜன.15), அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மறுநாள் (ஜன.16) ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை முதல் எட்டையபுரம் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில், இன்று
சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும், கேரள மாநிலத்தில் இருந்தும் சில கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தொடர் மழையினால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி, வெளியில் சற்று அதிகமாக விற்பனையானதாகவும், வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டது.
கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ஏழு கோடி ரூபாய் வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களை கட்டி உள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை; ஆரணி உழவர் சந்தையில் 32 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை!