தூத்துக்குடி: கூட்டாம்புளியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன் (44) என்பவரைக் கொலை வழக்குச் சம்பந்தமாகக் கைதுசெய்ய சென்ற இடத்தில் காவல் துறைக்கும் ரவுடி துரைமுருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தற்காப்புக்காகக் காவல் துறையினர் துரைமுருகனை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் காவல் துறைத் தரப்பில் காவல் உதவி ஆய்வாளர் ராஜ் பிரபு, ஆயுதப்படை காவலர் டேவிட்ராஜ் ஆகியோருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்தார்.
ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, "ரவுடி துரைமுருகன் மீது எட்டு மாவட்டங்களில் மொத்தம் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஏழு கொலை வழக்குகள் அடங்கும். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவரைக் கடத்திக் கொலைசெய்து நெல்லையில் புதைத்தது தொடர்பான வழக்கில் துரைமுருகனைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தப் பணியில் தூத்துக்குடி மாவட்ட தனிப் படையைச் சேர்ந்த காவல் உதவி காவல் ஆய்வாளர் ராஜ் பிரபு தலைமையிலானோர் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் முத்தையாபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியில் துரைமுருகன் உள்பட மூவர் பதுங்கியிருப்பதாகத் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற காவல் துறையினர் அவர்களைப் பிடிக்க முயன்றனர். இதைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அப்போது துரைமுருகன் ஒரு திசையிலும் மற்ற இருவரும் வெவ்வேறு திசைகளிலும் ஓடிச் சென்றனர். இதில் துரைமுருகனைச் சுற்றிவளைத்த காவல் துறையினர் அவரைச் சரணடையும்படி கூறினர். ஆனால் அவர் சரணடைய மறுத்து ஆயுதப்படை காவலர் டேவிட்ராஜ் என்பவரை இடதுகையில் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓட முயன்றார்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் ராஜ் பிரபு வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு அவரைச் சரணடையும்படி எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளரையும், துரைமுருகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
எனவே துரைமுருகனிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் காவல் துறையினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். என்கவுன்ட்டரில் சுடப்பட்ட துரைமுருகன், ஆட்களை கடத்தி கொலைசெய்து அவர்களைப் புதைத்துவைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க:கலாம் கனவு கானல் நீரானது ஏன்? - நேர்காணல் வெளியீடு!