தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை... ஸ்தம்பித்த தூத்துக்குடி நகரம்! - வெள்ளம்

Thoothukudi Heavy Rain: தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்யும் அதி கனமழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Thoothukudi Heavy Rain
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 12:49 PM IST

Updated : Dec 18, 2023, 1:08 PM IST

தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. தற்போது தான், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் தத்தளித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

அதற்குள் தென்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ளது. அதாவது தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று பகல் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், நேற்று இரவு விடிய, விடிய பெய்த மழையால் தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை ரோடு, வ.உ.சி சாலை, கடற்கரை சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், ராஜகோபால் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களும் மழை நீரில் மூழ்கின. தற்போது பெய்து வரும் மழைநீரால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த சூழலில், கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே புளியமரம் ஒன்று வேரோடு முறிந்து கீழே விழுந்தது. தீயணைப்பு நிலையம் அருகே டூரிஸ்ட் வேன் ஸ்டாண்ட் உள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் டூரிஸ்ட் வேன் ஒன்று முற்றிலும் உருக்குலைந்து சேதமடைந்தது. வேனில் இருந்த டிரைவரும் கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்த தீயணைப்புப்படை மீட்பு வீரர்கள் விரைந்து வந்து வேன் மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் கோவில்பட்டி - திருநெல்வேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அப்பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் போக்குவரத்து காவலர்கள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோன்று கிருஷ்ணா நகரில் உள்ள சுரங்கப் பாலம், இலுப்பையூரணி ரயில்வே சுரங்கப் பாலம் என மழை நீர் நிரம்பி உள்ள சுரங்கப் பாலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வரக்கூடிய பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் (இன்று டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்து துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கோரம்பள்ளம் குளக்கரையும் உடைந்துள்ளதால் தூத்துக்குடி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அரசுப் பேருந்துக்குள் கொட்டிய மழை.. பயணிகள் அவதி.. வைரலாகும் வீடியோ!

Last Updated : Dec 18, 2023, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details