தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரிய அமலாக்கத்துறையின் வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

minister
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

By

Published : Aug 2, 2023, 1:53 PM IST

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2001ஆம் ஆண்டு மே முதல் 2006ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட 6.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் விசாரித்து வருகிறார். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையானது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத்துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறையின் மனு கடந்த ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தம், மூத்த மகன் ஆனந்த பத்மநாபன் ஆகியோர் ஆஜராகவில்லை. இளைய மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜராகினர். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் சேது மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மதுரையைச் சேர்ந்த மனோகரன் என்ற வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணையில், தங்களையும் சேர்க்கக் கோரிய அமலாக்கத்துறையின் வழக்கு இன்று(ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் வழக்கு விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு விவகாரம் குறித்து ஓபிஎஸ் பேச்சு: கே.பி.முனுசாமி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details