தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசு தின விழா கொண்டாடாத பள்ளி: தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி இடைநீக்கம் - republic day function does not celebrate in tuticorin villathikulam school

துாத்துக்குடி: விளாத்திகுளத்தில் குடியரசு தினத்தன்று பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குடியரசு தின விழா
குடியரசு தின விழா

By

Published : Jan 27, 2020, 5:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குமராபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் வைத்து பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ராஜா என்பவர் தலைமையாசிரியராகவும், பாக்கிய செல்வி என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர்.

குடியரசு தினமான நேற்று விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, சிவபாலன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உள்பட பலர் எஸ். குமராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் புதியகட்டடம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு காலை 11.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்ததைப் பார்த்த எம்எல்ஏ சின்னப்பன், அப்பகுதி மக்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, பள்ளியில் தேசியக்கொடி பறக்கவைத்து குடியரசு தின விழா கொண்டாடப்படவில்லை என்பதும், தலைமை ஆசிரியரோ, இடைநிலை ஆசிரியரோ பள்ளிக்கு வரவில்லை எனவும் தெரியவந்தது.

தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி இடைநீக்கம்

இதையடுத்து, உடனடியாக பள்ளியின் கொடிக்கம்பத்தை சீரமைத்து விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் தேசியக்கொடி பறக்கவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இது தொடர்பாக விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் சரளாதேவியிடம் எம்எல்ஏ சின்னப்பன் புகார் அளித்துள்ளார்.

இந்தத் தகவலறிந்து விசாரணை தொடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், குடியரசு தின விழாவிற்கு பள்ளிக்கு வராமலும், குடியரசு தின விழா நடத்தாமல் இருந்த தலைமை ஆசிரியர் ராஜா, இடைநிலை ஆசிரியை பாக்கியசெல்வி ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குப் பதிலாக இன்று எஸ். குமராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாற்று ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்படுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details