தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு தலைமை காவலர் செல்வகுமார் மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் 70 வயது மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் முருகப்பெருமாளிடம் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வக்குமார் தினமும் பணியின் போது மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 70 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.