தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள வடக்கு கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவர் பசுவந்தனை பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று மாலை தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அதன் பின்னர், கொய்யாப்பழ வியாபாரி முருகன், பசுவந்தனை பஜார் பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடை முன்பு உயிருக்குப் போராடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய தலைமை காவலர் சுடலைமணி என்பவர், உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கொய்யாப்பழ வியாபாரி முருகனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.