தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க தொடக்க விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, இல்லாத ஒரு பிரச்னையை இருப்பதாகக் கூறும் ஜனநாயக விரோதப்போக்கு நடந்துவருகிறது. தொடர்ந்து மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுப்பது நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். இந்திய நாட்டைச் சேராத வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகின்ற அருவருப்பான செயலை எதிர்க்கட்சியினர் செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தை இந்தியர் அல்லாத சோனியாவும், தேசவிரோதி ஸ்டாலினும் ஒன்றிணைந்து தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தூண்டுதலின்பேரில் நாட்டில் மூன்று தூண்களின் மீதும் தாக்குதல்கள், வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.