துாத்துக்குடியில் செயல்படும் இரண்டு தனியார் நிறுவனங்கள் 13.88 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது மதுரை மத்திய ஜிஎஸ்டி அலுவலர்கள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர் கிரி ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் எனவும் கூறி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன், "மனுதாரர் ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய தொகையில் 1.5 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமீன் உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும். தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கின் சாட்சியங்களையும் ஆவணங்களையும் கலைக்க முயற்சிக்கக் கூடாது. விசாரணை அலுவலகத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும். இதை மீறும்பட்சத்தில் இவர் மீது புதிய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளலாம்" எனக் கூறிய பின்னர், மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.