தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்.23) காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாமா என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர்
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூடுதலாக மக்களை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுகவினர், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்களையும் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு அனுமதிக்கலாம் எனத் தகவல் வந்ததையடுத்து, அமைப்புக்கு தலா 3 பேரை உள்ளே காவல் துறையினர் அனுமதித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதற்கு சமூக அமைப்பினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டு அதன் பின்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இன்று காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இந்தக் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது என்றார்.