தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் சாதனை! தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புது மைல்கல்!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் முதல் முறையாக எகிப்தில் இருந்து பச்சை அமோனியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2 லட்சத்து ஆயிரத்து 204 டன் சரக்குகளை கையாண்டு ஒரே நாளில் அதிகபட்ச சரக்கு பெட்டகங்களை கையாண்ட துறைமுகம் என புது மைல்கல் படைத்து உள்ளது.

வ.உ.சி துறைமுகம் சாதனை
எகிப்திலிருந்து முதன்முறையாக பச்சை அமோனியா இறக்குமதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 8:31 AM IST

தூத்துக்குடி:பசுமை உற்பத்தியை அதிகரிக்க, எகிப்து நாட்டிலுள்ள டாமிட்டா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதன் முறையாக 37.4 டன் எடை கொண்ட பச்சை அமோனியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் சோடா சாம்பல் தயாரிக்கும் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனத்திற்காக பச்சை அமோனியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. சோடா சாம்பல் தயாரிப்பதற்கு வழக்கமாக கிரே அமோனியாவானது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பசுமை திட்டத்தின் முயற்சியாக, பச்சை அமோனியாவின் மூலம் சோடா சாம்பல் தயாரிக்க, எகிப்து டாமிட்டா துறைமுகத்தில் இருந்து 20 அடி நீளம் கொண்ட சரக்கு பெட்டகங்களில் 37.4 டன் பச்சை அமோனியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பச்சை அமோனியா தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு 2,000 மெட்ரிக் டன் பச்சை அமோனியாவை தனியார் நிறுவனம் இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 24ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து ஆயிரத்து 204 டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முன் கையாண்ட 2 லட்சத்து 642 டன் சாதனையை முறியடித்து உள்ளது.

இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு; தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு!

அதில், சரக்கு பெட்டகங்கள் (1,03,528 டன்), அனல் மின் நிலக்கரி (35,018 டன்), தொழிலக நிலக்கரி (27,233 டன்), சுண்ணாம்புக் கல் (12,868 டன்), கந்தக அமிலம் (10,930 டன்) மற்றும் மற்ற இதர சரக்குகள் (11,627 டன்) ஆகிய பல்வேறு சரக்குகள் கையாளப்பட்டு இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்தது.

இது குறித்து, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் பிமல் குமார் ஜா பேசுகையில், "பசுமைத் துறைமுக முயற்சிகளை மேற்கொள்வதில் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. துறைமுக செயல்பாடுகளில் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து பசுமை உற்பத்தியை அதிகரிப்பதற்கு துறைமுக வர்த்தக கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்கள் அனைவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பசுமை திட்டத்தின் ஒரு முயற்சியாக தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனம் பச்சை அமோனியா இறக்குமதி செய்திருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.. தி குரூப் நிறுவனம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details