தூத்துக்குடி: குரூஸ் பர்னாந்து 1909ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தூத்துக்குடி நகர மக்கள், சுகாதாரமற்ற கிணற்று நீரை குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்த நிலையில், அம்மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்து கப்பல் மூலம் குடிநீர் கொண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து கடம்பூரில் இருந்து ரயில் மூலமாக குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். மேலும், கோரம்பள்ளம் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டு வந்தது மட்டுமன்றி நிரந்தரமாக குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தூத்துக்குடி மாநகர மக்களுக்காக தாமிரபரணி ஆற்றுப்படுகையான வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்தார்.
குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சித் தலைவராக இருந்த அவரது பிறந்த தினத்தை இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து முதன்முதலாக அவருடைய 151ஆவது பிறந்தநாள் இன்று(நவம்பர் 15) அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட இறுதி நாளில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க:குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் - பரதர் சங்கத்தினர் வேண்டுகோள்