தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள கம்மவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, யோகா போட்டி, சிலம்பாட்ட போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில்கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.