தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு... "விரைவில் தூத்துக்குடி மக்ரூன், விளாத்திகுளம் குண்டு மிளகாய்க்கும் கிடைக்கும்" - கனிமொழி! - today news in tamil

Geographical code for Athur Betel: ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, புவிசார் குறியீடு சான்றிதழை எம்.பி கனிமொழி, வெற்றிலை விவசாய சங்கத்தினரிடம் வழங்கினார்.

புவிசார் குறியீடு சான்றிதழை வெற்றிலை விவசாய சங்கத்தினரிடம் வழங்கிய கனிமொழி
புவிசார் குறியீடு சான்றிதழை வெற்றிலை விவசாய சங்கத்தினரிடம் வழங்கிய கனிமொழி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 9:18 AM IST

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

தூத்துக்குடி:விளாத்திகுளம் குண்டு மிளகாய் மற்றும் தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்டவைகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என எம்.பி கனிமொழி கூறினார்.

தனிச்சிறப்பு மிக்க ஆத்தூர் வெற்றிலை:தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி பாசனத்தில் விளையும் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. அதிக காரத்தன்மை கொண்ட ஆத்தூர் வெற்றிலை, செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை உடையது. மண், காற்று வளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணமாக கருதப்படுகிறது.

ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெற்று வருகின்றன. ஆத்தூர் வெற்றிலை, தமிழகம் மட்டுமின்றி இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த ஆத்தூர் வெற்றிலைக்கு தான் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகளிடம் வழங்கப்பட்ட புவிசார் குறியீடு சான்றிதழ்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கலந்து கொண்டார். அதனை அடுத்து ஆத்தூர் வெற்றிலைக்கு கிடைத்த புவிசார் குறியீடு சான்றிதழை, வெற்றிலை விவசாய சங்கத்தினர் மற்றும் வெற்றிலை விவசாயிகளிடம் வழங்கினார்.

புவிசார் குறியீடு அதிகம் பெற்ற மாநிலம்:இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, "தமிழகத்தில் பாரம்பரியமாக தயாராகும் அனைத்து பொருட்களுக்கும், புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் இதுவரை 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு என்பது பெறப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலேயே புவிசார் குறியீடு அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.

தூத்துக்குடி மக்ரூன், விளாத்திகுளம் குண்டு மிளகாய்:தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் தொன்மையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடலை மிட்டாய்க்கும், தற்போது ஆத்தூர் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தொடர்ந்து தூத்துக்குடி மக்ரூன் மற்றும் விளாத்திகுளம் குண்டு மிளகாய் உள்ளிட்டவைகளுக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பாரம்பரியமான பழமையான பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கடந்த மாதம் ஜடேரி நாமக்கட்டி, செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த நிலையில், தற்போது ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளி மனு.. ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details