திருச்செந்தூர் மாவட்டம் அமலி பகுதியில் அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கட்டடத்திலுள்ள மூன்றாம் வகுப்பின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழிருந்த மாணவர்கள் அக்ஸன், ஜெயம், ஆண்ட்ரூ,மெர்சிராணி ஆகிய நான்கு பேருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, பள்ளிக்கு சென்று பள்ளியின் தரத்தை ஆய்வு செய்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பள்ளியின் மேற்கூரை இடிந்து-நான்கு மாணவர்கள் காயம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பள்ளி கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முறைகேடு எதாவது நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.