தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலை வழக்கு - 4 பேர் ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரண்! - நெல்லை வாலிபர் கொலை வழக்கு கைதிகள் சரண்

நெல்லை வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனனர்.

Convicts who surrendered in the Nellie youth murder case
நெல்லை வாலிபர் கொலை வழக்கில் சரண் அடைந்த குற்றவாளிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 9:20 AM IST

தூத்துக்குடி:நெல்லை மாவட்டம் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் முகம்மது அசாருதீன் (35). இவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், நேற்றைய முன்தினம் இரவு பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த அசாருதீனை, 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.

முகம்மது அசாருதீனுக்கும், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த டவுண் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஓட்டுநரான மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி, அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜன், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

இதனையடுத்து, அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடபெற்று வந்தது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய டவுனைச் சேர்ந்த செல்வமும், அசாருதீனால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

செல்வத்தின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கித் தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார். ஆனால், ரூ.14 லட்சம் மட்டுமே செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார். மேலும், செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார், அசாருதீன்.

அந்த விவகாரத்தில் செல்வம் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாராஜனுடன் சேர்ந்து அசாருதீனை செல்வம், அவரது மற்றொரு நண்பர் கொன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலையில் முக்கிய நபராக கருதப்படும் மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (25) மற்றும் சபரி மணி (23) ஆகிய நான்கு பேர் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதையும் படிங்க:சேலம் எஸ்விஎஸ் நகைக்கடை மோசடி; பணத்தை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details