தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட பிரதிநிதி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ கூறியதாவது, 'நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டாலும், கூட்டணி பலம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதிமுக பிரதான எதிர்க்கட்சி
அதிமுக சில தொகுதிகளில் குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக சசிகலா தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றியை பாதிக்கும் வகையில், மறைமுகமாக அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதியில் இருக்கும் கோயில்களுக்குச் சென்றார்.
மறைமுக தேர்தல் பரப்புரை செய்த சசிகலா
கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டபோதுகூட துரோகிகளுக்கு இடமில்லை என்று கூறி, தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள். கோயில் வழிபாடு என்ற போர்வையில் மறைமுக தேர்தல் பரப்புரையை சசிகலா மேற்கொண்டார். ஆகையால், சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் சசிகலா ஆதரவாக விளாத்திகுளத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. அதிமுக பெயரை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க: ‘சசிகலா ஆடியோ குறித்து கருத்து கூறுவது சரியில்லை’-கடம்பூர் ராஜூ!