தூத்துக்குடி:தூத்துக்குடியில் உள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 2023-2024ஆம் ஆண்டில் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் வஉசி கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
வஉசி கல்லுரியில் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சிகான தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சிவன் கூறுகையில், ‘இந்திய விண்வெளி ஆய்வு மையமானது சந்திராயன் 3 வெற்றிகரமாக செலுத்தியதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 திட்டமும் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது.
அதன்பின், ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை முனைப்பு காட்டி வருகிறது. ராக்கெட்டுகளை விண்ணிற்கு செலுத்தும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மட்டுமல்ல, பல தனியார் நிறுவனங்களும் ஈடுபட உள்ளன. இதற்காக அரசு பல செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை செலுத்தும்போது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ‘இன்ஸ்பேஸ்’ என்ற ஒரு திட்டத்தையும் வடிவமைத்துள்ளது.
அதன் மூலமாக, செயற்கைக்கோள் செலுத்தக்கூடிய நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பது போன்ற விபரங்களை தெரிந்து கொண்டு, அதன் மூலமாகவே அவர்களுக்கு உரிய அனுமதி அளிக்கப்படும். இதுவரை 140க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் செலுத்துவதற்கு விருப்பங்களை தெரிவித்துள்ளது.