தூத்துக்குடி:Thoothukudi massacre: தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கெனவே நடந்த 33 கட்ட விசாரணையில் 1,031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
34ஆவது கட்ட விசாரணை
இந்த நிலையில் 34ஆவது கட்ட விசாரணை கடந்த 27ஆம் தேதி தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கியது.
முதல் நாள் விசாரணையில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அலுவலருமான அருண் சக்திகுமார் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டாம் நாள் விசாரணையில் ஆஜராக கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை ஆணையர் ஜெயச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவல் ஆணையர் பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் நேற்று (டிச.18) ஒரு நபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
3ஆவது நாள் விசாரணை
தொடர்ந்து மூன்றாவது நாள் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று (டிச.29) தொடங்கியது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியருமான வெங்கடேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
34 ஆவது கட்டமாக நடைபெறும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஒரு நபர் ஆணையத்தின் 34ஆவது கட்ட இறுதிநாள் விசாரணை நாளை (டிச.30) நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றிய வீரப்பன் ஆஜராக உள்ளார்.
இதையும் படிங்க: Tamilnadu Abuse cases increased:பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன்