தூத்துக்குடி: சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 13 வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஒருங்கிணைத்து, 'ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து, இந்தியாவிற்கு அழைத்து வருகிறது.
கடந்த 2 வருடமாக கரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் வராத சூழ்நிலையில், 16-வது ஆண்டாக இந்த ஆண்டும் அதேபோல ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம், 17 குழுக்களாகப் பிரிந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது.
இதில், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மன், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த 8 பெண்கள் உட்பட 37 பேர் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை, வழியாக நேற்று (3.1.2023) தூத்துக்குடி வந்தனர். இவர்கள், தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் உள்ள 'பிரம்மஜோதி' என்ற தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்த நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக, தோட்டத்தில் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்கு கொய்யாப்பழம், பலாப்பழம், பனங்கிழங்கு, நெல்லிக்காய், ஸ்டார் பழம், முட்டை பழம், சப்போட்டா ஆகியவற்றை ருசித்தும்; இளநீர், ஆகிய இயற்கை பானங்களை அருந்தியும் மகிழ்ந்தனர்.