தூத்துக்குடி: தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்குக் கிடைத்த தகவலையடுத்து, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், ஒட்டப்பிடார ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சௌத் இண்டியா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு குடோன்களை ஆய்வு செய்தனர்.
அதில், அந்த குடோன்களை 'ஆஸ்பின்வால் அன்ட் கம்பெனி லிமிட்' என்ற நிறுவனம் வாடகைக்கு எடுத்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருப்பதும், அதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதிக்காக இருப்பு வைத்திருப்பதும் தெரியவந்தது. ஆனால், பெரும்பாலான மக்காச்சோள மூட்டைகளில் வண்டு மற்றும் பூச்சிகள் இருப்பதும், குடோன் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் 15 ஆயிரம் டன் மக்காச்சோளத்தையும் பறிமுதல் செய்தனர். உணவு வணிகர்கள் கொள்முதல் சார்ந்த விபரங்களைத் தாக்கல் செய்யாததால், பறிமுதல் செய்யப்பட்டவற்றின் உண்மையான மதிப்பு குறித்து சரியான தகவல் தெரியவில்லை. இருந்தாலும், பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு தோராயமாக 20 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், அக்குடோனின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார். தொடர் விசாரணைக்காகவும், உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்ய ஏதுவாகவும், சாட்சியங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருளின் பாதுகாப்பிற்காகவும், மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டவற்றிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்து, தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, "உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.
உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "கேரள மீனவர்களை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம்" அரசை எச்சரித்த மீனவர்கள்!!