தூத்துக்குடி: வழக்கம்போல் நேற்று இரவு (ஜூலை 12) கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
யூ-ட்யூப் பார்த்து கொள்ளைத் திட்டம்
விசாரணையில் கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கியில், ஐந்து பேரும் பல மாதங்களாகக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியது தெரியவந்தது. கொள்ளை அடிப்பதற்கான பயிற்சித் திட்டத்தை யூ-ட்யூபில் ஒளிபரப்பாகும் படங்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டுள்ளனர்.
மேலும் தங்களுடைய வாட்ஸ்அப் செயலி மூலமாக கொள்ளைச் செயல்திட்டம் குறித்த தகவல்களை, அவ்வப்போது பகிர்ந்துவந்துள்ளனர்.