தூத்துக்குடி: கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கியது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.
இந்தப் பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் மாயமாயினர். மேலும், இந்த பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் ஆயினும், அதன் பாதிப்புகள் இன்றளவும் கடற்கரை கிராமங்களில் தொடர்கிறது. இந்த மீளாத் துயரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் இன்று 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.