தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொதுநிலத்தை மீனவர்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி மற்றும் சங்குக்குளி தொழிலாளிகள் சங்கம் சார்பில் பூபாலராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள், சி.ஐ.டி.யு சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதைதொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகி பேச்சிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மீனவ சங்க பொதுமக்கள் பைபர் படகுகள் பழுதுபார்க்க, மீன் வலைகளை உலர வைப்பதற்கு திரேஸ்புரம் முத்தரையர் நகர் வடக்கு பகுதியில் பொது இடம் இருந்து வந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திரேஸ்புரம் மீனவர்கள்
தற்போது இந்த இடத்தை தனிநபர்கள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மீனவ பொதுமக்கள் கோயில் திருவிழா நாட்களில் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வியாபாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகுகள், மீன் வலைகளை சரிபார்ப்பதற்கும் வேறு இடம் இல்லை.
எனவே தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள இரண்டு ஏக்கர் பொதுநிலத்தை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவ மக்கள் ஒன்றுதிரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.