தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17, 18 ஆம் தேதி அதிகனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சோதம் ஏற்ப்பட்டது.
இந்நிலையில், 9 நாட்களுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று (டிச.26) தூத்துக்குடி வந்தார்.
முன்னதாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் குறிஞ்சி நகர், கோரம்பள்ளம் கண்மாய், அந்தோணியார் புரம் பாலம் உடைப்பு, முறப்பநாடு குடிநீர் தொட்டி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மனத்தி பகுதியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து ஏரல் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு அப்பகுதி வியாபாரிகள் தங்களது வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 'முத்ரா திட்டம்' போல, வட்டி இல்லா கடன் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது புன்னக்காயல் பகுதியை சேர்ந்த மீனவர் சங்க துணை தலைவர் ராபர்ட் தலைமையில் வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள், அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு ஒன்றை அளித்தனர்.