தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலமாக கடன் பெற்று வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் கடந்த 3 மாதமாக அபராத தொகையை வீடு தேடி மிரட்டி வசூலித்து வந்துள்ளது.
ஊரடங்கின் காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவிப்பு செய்துள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தனது தவணை தொகையை செலுத்த இயலாமல் இருந்துள்ளனர். ஆனால் அரசு உத்தரவையும் மீறி இந்நிறுவனம் அனைவருக்கும் அபராதம் விதித்து கட்டாய வசூல் செய்துள்ளது.
4 ஆயிரம் ரூபாய்க்கு 920 ரூபாயும், 2ஆயிரம் ரூபாய்க்கு 560 ரூபாயும் அபராத தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தில் விளக்கம் கேட்க முயன்றுள்ளனர். பஜாஜ் பைனான்ஸ் நிர்வாக ஊழியர்களோ, எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று மலுப்பலான பேசியதுடன், மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசி வாடிக்கையாளர்களை தாக்கவும் வந்துள்ளனர்.