தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக புதிய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, ”தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7லட்சத்து 11 ஆயிரத்து 72 ஆண்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 487 பெண்கள், 130 பேர் திருநங்கையர் என மொத்தம் 14 லட்சத்து 50ஆயிரத்து 689 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். கடந்த மாதம் நடத்தப்பட்ட வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் மூலமாக பெறப்பட்ட மனுக்களில் 15 ஆயிரத்து 807 ஆண்கள், 17ஆயிரத்து 613 பெண்கள், 18 திருநங்கையர் என 33 ஆயிரத்து 438 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கட்டடம் 3 கோடி 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. கட்டடம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு, செயல்திட்டம், நிதி உள்ளிட்ட அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறையின்படியே செயல்படுத்தப்படுகிறது. இது இரண்டு தளங்களைக் கொண்ட கட்டடமாக கட்டப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு போதுமான இடவசதி ஏற்படுத்தப்படும். இந்த பணிகள் அடுத்த ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும்” என்றார்.
இதையும் படிங்க : விமரிசையாக நடைபெற்ற கயத்தாறு லூர்து அன்னை ஆலய தேர் பவனி