தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் தேவி குமார் (36). இவர் வாகன தரகர் தொழில் செய்துவருகிறார்.
இவரது மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு ஷைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ராணி (9) என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகள் ஐந்தாம் வகுப்பும், இளையமகள் மூன்றாம் வகுப்பும் படித்துவந்தனர். இந்நிலையில், தேவி குமாருக்கு அதிகக் கடன் பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனால், தனது இரு பிள்ளைகளையும் வளர்க்கமுடியாமல் சிரமப்பட்டுவந்தார்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட தேவி குமார் சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் தனது இரு மகள்களையும் தள்ளிவிட்டுள்ளார். நீச்சல் தெரியாத இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பின்னர் தேவி குமார் தனது நண்பரை செல்போனில் தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவர் உடனடியாகக் கிழக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
குழந்தைகளின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு மீட்புப்படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் ஜே. விஜயா, வட்டாட்சியர் பி. மணிகண்டன், காவல் துணைகண்காணிப்பாளர் எம். ஜெபராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, தேவிகுமாரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:தாயிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த மகன்!