தூத்துக்குடி: கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அரங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கூறுகையில், கந்தசஷ்டி திருவிழா வரும் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரையிலும் மொத்தம் ஒரு வாரம் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30-ம் தேதியும், திருகல்யாணம் வைபவம் 31-ம் தேதியும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவில் கலந்துகொள்ள 10-லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைபட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என்றனர்.
அதைபோல் சிறப்பு இரயில்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை. தனி நபர் அன்னதானம் வழங்க வேண்டுமானல் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர். கந்தசஷ்டி திருவிழாவிற்காக 2,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பறக்கும் கேமரா (ட்ரோன்)மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளன.