தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் செம்மறி ஆடுகளுக்கு முகக்கவசம் அணிந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது தமிழ்நாட்டில் கால்நடை சந்தைகளை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் உற்பத்தி செய்த பருத்தி, மக்காச்சோளம், வத்தல், பருப்பு வகைகளை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதில், கால்நடை சந்தைகள் கடந்த நான்கு மாதங்களாக இயங்காததால் விவசாயத்தின் உப தொழிலான ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் எந்தவித வருமானமுமின்றி சோர்ந்து போயுள்ளனர்.
இதனால் முற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டு, கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் உரிய பருவத்தில் விற்பனை செய்ய முடியாமல் முடங்கி கிடக்கிறது. விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
சந்தையை திறக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் ஆடுகளுடன் முற்றுகையிட்ட விவசாயிகள் தற்போது தென் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக செம்மறி ஆட்டு கிடா குட்டிகள் வளர்க்கப்பட்டு, விவசாயிகளிடம் தேக்க நிலையில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 1) கொண்டாடப்படவுள்ளதால் குர்பானிக்காக ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகள் தேவை அதிகரித்துள்ள நிலையில், சந்தைகள் இயங்காமல் செம்மறி ஆடுகள் விற்பனையாகவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சந்தைகளை திறந்து ஆடு, மாடு, கோழி விற்பனைக்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்மின் கோபுர திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!