தமிழ்நாட்டில், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இந்தியன் ஆயில் கழகம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவந்தது.
இந்தப் பணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். அவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்துவந்தனர்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் தரப்பில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு இழப்பீடு பெறச் சம்மதம் தெரிவித்தனர்.
எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்குத் தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் உள்ள விவசாய நிலங்கள் இந்தப் பணி தற்போது 95 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், குலையன்கரிசலைச் சேர்ந்த விவசாயிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயி ஆஸ்கர் தலைமையில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் இந்தியன் ஆயில் கழகத்திற்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.
இது குறித்து விவசாயி ஆஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்துவருகிறோம். எதிர்ப்பையும் மீறி எரிவாயு குழாய் நிறுவனத்தினர் விவசாயிகளின் நிலங்களில் அத்துமீறி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இது தொடர்பாக பலமுறை நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்துள்ளோம். அதன்பேரில், விவசாயிகள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் சம்மதம் தெரிவித்தனர். தற்பொழுது எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைகூட எண்ணெய் நிறுவனத்தினர் நிறைவேற்றித் தரவில்லை.
மேலும் எரிவாயு குழாய் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்களில் தோண்டப்பட்ட குழிகளையும் சமன்படுத்தி தராமல் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் விவசாயிகள் தங்களது அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்தும் நீர்ப்பாசன வசதி இருந்தும் இந்தியன் ஆயில் கழகத்தினர் நிலத்தைச் சீரமைத்துத் தராததால் எங்களுடைய விவசாயம் பாழ்பட்டுள்ளது.
எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்குத் தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் உள்ள விவசாய நிலங்கள் ஆகவே எண்ணெய் நிறுவனத்தினரால் சேதப்படுத்தப்பட்ட நிலங்களை அலுவலர்கள் உடனடியாகச் சீரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் டெல்லி விவசாயிகள் போராட்டம்போல குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அவரவர் நிலங்களில் இறங்கி குடியேறும் போராட்டத்தைக் காலவரையின்றி தொடரும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.
இதையம் படிங்க:எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்